நூலாசிரியர்
கல்வியின் அடிப்படையில் பொறியாளராகவும் காதலின் அடிப்படையில் எழுத்தாளராகவும் இருந்த சந்தோஷ் மாதேவன், தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்தவுடன், எழுத்தினால் மட்டுமே ஊதியம் பெறவேண்டும் என்ற முடிவை எடுத்து, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் நிருபராகப் பணியாற்றத் தொடங்கினார். அந்த இதழியல் பயணம் அவரை நியூஸ் டுடே, டாக் மீடியா, விகடன் என பல இடங்களுக்கு அழைத்துச் சென்று இறுதியாக திரைத்துறைக்குள் கொண்டுசேர்த்தது. இதற்கிடையில் வலைப்பதிவு, இணைய நிகழ்ச்சிகள், திரைக்கதை எழுத்துப் பட்டறைகள் என தன் இறக்கைகளை விரித்துப் பறக்கத் தொடங்கினார். இவருடைய இணைய ஒலிபரப்பு நிகழ்ச்சிகள்(podcasts) ‘திரைக்கதைப்போமா’ (Thiraikkadhaippoma™) மற்றும் ‘தாக்கல் சொல்ல வந்தேன்’ இவர் இறக்கைகளில் மேலும் சில இறகுகளைச் சேர்த்து உயரக் கொண்டு சென்றன. தற்போது, எழுத்தினால் மட்டுமே ஊதியம் பெறவேண்டும் என்ற அதே முனைப்புடன், தென்னிந்தியத் திரையுலகில் திரைக்கதை ஆசிரியராகவும் திரைக்கதை எழுத்துப் பட்டறைகளில் விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறார்.